புதன், 26 டிசம்பர், 2012

நம்பிக்கை நாற்றுகள்




இனி எங்கே வளரப் போகிறது என 
வித்திட்டவளே மறந்திட்ட நிலையில் 
திடீரென துளிர்த்து நிற்கும் 
பட்டுப் போன தென்னங்கன்று 

மருத்துவரும் கை விரித்த  போதும் 
தலை திரும்பி வெளி வந்த கன்றை 
எப்படியும் பிரசுவித்து விட வேண்டுமென 
வலு திரட்டிப் போராடும் எருமை 

பெற்றெடுத்த பிள்ளைகள் கை விட்ட போது
சுயத்தை மட்டுமே நம்பியபடி 
முதுகுக்கூன் மேல் கூடை வைத்து 
கீரை விற்கும் பாவாயி பாட்டி 

விளிம்புநிலை வாழ்வை சுமந்தபடி 
அன்றாடத் தேவைக்காய் அன்றாடம் உழைத்துக் கொண்டே 
பிறரின் உரிமைக்காய் குரல் கொடுக்கும் 
சேரித் தெரு மாறி அக்கா 

இப்படியாய் இன்னும் சிலர் 
புதியதாய் பிறக்க வைத்து இருகிறார்கள் 
முடிந்தே விட்டது வாழ்க்கை என நான் 
மூச்சடைத்து நின்ற தருணங்களில் எல்லாம்!!!

1 கருத்து: